அருள்மிகு விஸ்வநாத சுவாமி திருக்கோவில், சிவகாசி - 626 123.


life general mutual share

சிவகாசி சிவன் கோவிலின் அமைப்பு

தற்போது உள்ள சிவன் கோயிலின் அமைப்பையும், அழகையும் கண்டு வணங்க நாம் கோயிலுக்குள் செல்கின்றோம்.

கீழரத வீதியில் இருந்து பார்த்தாலே, கீழ் திசை நோக்கிய தோரண வாயில் வழியாக அருள்மிகு விஸ்வநாத சுவாமி திருக்கோவிலின் சன்னதி நன்றாக தெரியும். தீர்த்தத்தின் வெளிவாயிலில் இருந்து பார்த்தால் அருள்மிகு விசாலாட்சி அம்மன் சன்னதி நன்றாக தெரியும்.

கீழரத வீதியில் இருந்து வணங்கியபடியே மேற்கு நோக்கி நடந்து, கீழ்திசை நோக்கிய தோரண வாயிலைக் கடந்து திருக்கோவிலின் வெளி மண்டபத்திற்குள் நுழைகின்றோம்.

வலதுபுறம் வளையல் கடைகளும், பூக்கடைகளும் நம்மை வரவேற்கின்றன. இடதுபுறம் தெற்கு ரத வீதியில் இருந்து மாடவீதி வழியாக திருக்கோவிலின் வெளி மண்டபத்திற்குள் வருவதற்கு தென்திசை நோக்கிய தோரண வாயில் அமைந்துள்ளது. சற்று முன்பு சென்றால் இடதுபுறம் திருக்கோவிலின் அலுவலக அறையும், வலதுபுறம் நூலகமும் அமைக்கப்பட்டுள்ளன. அதன் பின்சன்னல் வழியாக சிவகங்கை தீர்த்தத்தை காணலாம். சற்று முன்பு சென்று இடதுபுறம் அமைந்துள்ள கல்யாண கணபதியைத் தரிசித்துவிட்டு, வலதுபுறம் உள்ள பழனி ஆண்டவரைத் தரிசிக்கின்றோம்.

திருக்கோவிலின் வெளி மண்டபத்தில் இருந்து அருள்மிகு விஸ்வநாத சுவாமி சன்னதிக்கு செல்வதற்காக அமைக்கபட்டுள்ள கோவிலின் பிரதான வாயில் 24 அடி உயரக் கதவை உடையது. தற்போது அக்கதவு புதிதாக அமைக்கப்பட்டு வேலைபாடுகளுடன் கூடிய எவர்சில்வர் தகட்டினால் பொதியப்பட்டுள்ளது. இந்த இடம் 9 மாடங்களையுடைய 136 அடி உயரமுள்ள இராஜகோபுரம் அமைய இருக்கும் கோபுர வாயிலாகும்.

கோபுர வாயிலைக் கடந்து கோவிலிக்கு உள்ளே சென்றதும் நேராக கொடிமரமும், வலது இடது புறமும் மேற்கு முகமாக சூரிய தேவன் மற்றும் சந்திர தேவனையும் தரிசிக்கலாம். கொடிக் கம்பத்தின் முன்பு நின்று நேராக பார்த்தால் கிழக்கு நோக்கி எழுந்தருளிருக்கும் சிவலிங்க வடிவில் உள்ள அருள்மிகு விஸ்வநாத சுவாமியை தரிசிக்கின்றோம்.

இடதுபுறமாக, தெற்கு திரும்பி நடந்தால் தென்கிழக்கு மூலையில் வடக்கு நோக்கி காட்சியளிக்கும் மாணிக்கவாசகரை தரிசிக்கலாம். வலதுபுறமாக, மேற்கு திரும்பி நடந்தால் தெற்குப் பிரகாரத்தில் வடக்கு நோக்கி வணங்கிய திருக்கோலத்தில் 63 நாயன்மார்கள் வரிசையாக நிற்கும் அழகை தரிசிக்கலாம். மேலும் சைவ சமயக் குரவர்கள் நால்வருடன் பொள்ளாப் பிள்ளையாரையும் இறுதியாக கிழக்கு முகமாக எழுந்தருளியுள்ள பெரிய புராணம் படிய சேக்கிழார் சுவாமிகளையும் அவர்களுடன் அருள்மிகு வரசித்தி விநாயகர், அருள்மிகு சொக்கநாதர் - மீனாட்சி அம்பாளையும் தரிசிக்கலாம்.

தெற்குப் பிரகாரத்தைக் கடந்து, மேற்குப் பிரகாரத்தில் தென்மேற்கு மூலையில் கிழக்கு நோக்கிய அருள்மிகு கன்னிமூல கணபதியைக் கைதொழுதுவிட்டு, அடுத்து புதிதாக அமைக்கப்பட்டுள்ள அழகிய சன்னதியில் அமர்ந்த திருக்கோலத்தில் பஞ்ச உலோக மூர்த்தியாக அருள்மிகு ஸ்ரீ ஐயப்பன் பக்தர்களுக்கு கீழ்திசை நோக்கி அருள் பாலித்துக் கொண்டிருப்பதைக் காணலாம். வில்வமரத்து அடியில் அமைந்துள்ள மேடையில் நாக தேவதைகள் எழுந்தருளியுள்ளனர். அதை அடுத்து சிவகாசி அருள்மிகு விஸ்வநாத சுவாமி திருகோவிலின் ஸ்தல விருட்சமான மகாலிங்க மரத்தைக் காணலாம்.

அருள்மிகு ஸ்ரீ விஸ்வநாத மூர்த்தியின் கர்ப்பக்கிரகத்தைச் சுற்றி வெளிப்புறத்தில் தென்முகமாக சின்முத்திரையில் காட்சியளிக்கும் அருள்மிகு தட்சணாமூர்த்தியையும், மேற்குமுகமாக லிங்கோத்பவரையும், வடக்குமுகமாக அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ துர்க்கை அம்மனையும் தரிசிக்கலாம்.

அம்மனை தரிசித்து விட்டு மேற்குமுகமாகத் திரும்பினால் ஆதியில் அமைந்துள்ள சிறு சன்னதியில் காசியில் இருந்து வந்து தங்கிய அருள்மிகு காசி விஸ்வநாத சுவாமியின் தரிசனம் பெறலாம். அதன் பின்புறமாக வன்னிமரம் வளர்ந்து இருப்பதையும் காணலாம். அதன் அருகில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அருள்மிகு ஸ்ரீ ஆஞ்சநேயர் சன்னதி அழகுற அமைக்கப்பட்டுள்ளது.

அஞ்சனா தேவியின் மைந்தனைத் தரிசித்து விட்டு, வடக்கு நோக்கி சற்று முன் சென்றால் வடக்குப் பிராகாரத்தின் வடமேற்கு மூலையில் அருள்மிகு சுப்ரமணிய சுவாமிகள் வள்ளி தெய்வாணை சமேதராக அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார். அச்சன்னதியை ஒட்டி தென்புறத்தில் கிழக்கும் தெற்கும் திறந்த வெளியாகயுள்ள சிவராத்திரி மண்டபத்தைக் காணலாம். சிவராத்திரி விழா, முக்கிய பெரிய நிகழ்ச்சிகளும் நடத்தப்படும் இடமும் அதுவே ஆகும்.

முருகப் பெருமான் தரிசனத்திற்குப் பிறகு வடக்கு பிராகாரத்தில் கிழக்கு நோக்கி வந்தால் வலது புறத்தில் ஸ்ரீ மகாலட்சுமி கீழ்முகமாக அருள்மிகு கஜலட்சுமி தயார் அருள் பாலித்துக் கொண்டிருப்பதைக் காணலாம். அச்சன்னதியின் பின்புறம் நாகலிங்கமரம் வளர்ந்து வருவதைக் காணலாம்.

திருமகள் தரிசனம் நிறைவேறியதும் கிழக்கு நோக்கி நடந்தால் இடதுபுறம் அருள்மிகு நடராஜர் சன்னதியில் நின்று அய்யனை தரிசனம் செய்யலாம். அவர் இடதுபுறம் வடகிழக்கு மூலையில் பைரவர் சன்னதி அமைந்துள்ளன.

கிழக்குப் பிராகாரத்திற்கு சென்றால் இடதுபுறம் வீரபத்திரரும், சிவகங்கைத் தீர்த்தத்தின் நுழைவு வாயிலும் அமைந்துள்ளது. தீர்த்தம் கோவிலுக்குள் பெய்யும் மழைநீரால் நீரம்புகின்றது. அதன் உட்புறம் ஒரு கிணறும் அமைந்துள்ளன.

கிழக்குப் பிராகாரத்தின் வலதுபுறம் நவக்கிரகங்களைக் காணலாம், சற்று முன் சென்றால் கொடிமரம், நந்தி, பலிபீடம் மூன்றையும் காணலாம். சற்று முன்புறமாக சென்றால் கோவிலின் கோபுர வாயிலை அடையலாம்.

கொடி மரத்தின் முன்பாக நின்று அருள்மிகு விஸ்வநாதப் பெருமானையும், நடராஜப் பெருமானையும் அங்கப்பிரதிஷ்டையாக (தரையில் உடல்படும்படி விழுந்து) வணங்கி இடதுபுறமாக அருள்மிகு விஸ்வநாத சுவாமி சன்னதியை நோக்கிச் செல்கின்றோம். வலதுபுறம் கொடிமரம், பலிபீடம், திருநந்தீஸ்வரர் ஆகியவற்றை வணங்கி நந்தி எம்பெரும்மானின் அருள் ஆசியுடன் துவார பாலகர்களை வணங்கி அருள்மிகு விஸ்வநாத சுவாமியின் சன்னதிக்குள் செல்கின்றோம்.

விஸ்வநாத சுவாமி சிவலிங்க வடிவில் காட்சி தருகிறார். குடமுழுக்கினை ஒட்டி வெள்ளிக் கவசமும், தங்கக் கவசமும் செய்யப் பெற்றுள்ளன. ஒவ்வொரு தமிழ் மாதப்பிறப்பு, பிரதோஷ நாட்கள் மற்றும் சிவபெருமானுக்குரிய திருநாட்களில் கவசங்கள் சாத்தப்படுக்கின்றன. சன்னதியின் இடதுபுறம் தெற்கு நோக்கியபடி நடராஜர் (உற்சவர்) திருநடனக் கோலத்தில் கட்சி அளிக்கிறார். அழகிய மரவேலைப்பாடுகளுடன் சித்திரசபை போலக்காட்சி தருகின்றது.

அருள்மிகு விஸ்வநாதர், நடராஜர் இருவரையும் தரிசித்த பின் தெற்கு வாசல் வழியாக வெளியேறினால் அழகிய பளபளக்கும் கருங்கல் தூண்களுடன் அமைந்த கொலுமண்டபம் பின்புறம் சோமாஸ்கந்த மூர்த்தியாக ப்ரியாவிடையாளுடன் விஸ்வநாதர், முருகன், விசாலாட்சி ஆகிய உற்சவ மூர்த்திகள் அருள்பாலித்துக் கொண்டிருக்கின்றனர்.

அங்கிருந்து மகாமண்டபம், திருமண மண்டபம் இரண்டையும் கடந்து சந்தான சௌபாக்கிய (இரட்டை) விநாயகர்களை தரிசித்துவிட்டு விசாலாட்சி அம்மன் சன்னதிக்குள் செல்கின்றோம். அழகிய திருக்கோலத்தில் அருள்மிகு விசாலாட்சி அம்மன் நின்று அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார். சன்னதியின் இடதுபுறத்தில் அழகிய எவர்சில்வர் தகடு பதிக்கப் பெற்ற சுவற்றுடன் கூடிய கதவுகளும் அமைக்கப்பட்டுள்ளன.

தெற்கு வாசல் வழியாக வெளியேறி சண்டிகேஸ்வர நாயனாரைத் தரிசித்து விட்டு இரு மகாசன்னதிகளுக்கும் இடையே அமைந்துள்ள திருமண மண்டபத்தில் சற்று நேரம் அமர்ந்து மனதை ஒருமுகப்படுத்தி, தியானித்து வெளியேறுகின்றோம்.

திருமண மண்டபம் 1966-ல் நிறைவேறிய குடமுழுக்கின் பொது அமைக்கப்பட்டது. தற்போது எல்லா மண்டபங்களுக்கும், சன்னதிகளுக்கும் முன்பு சலவைக் கற்கள் பதிக்கப் பெற்ற தரையை உடையது. மணிமண்டபச் சுவர்கள் பளபளப்புடன் கூடிய சலவைக் கற்கள் பதிக்கப் பெற்றவை.

கோவில் சுவர்களில் ஆங்காங்கே தேவாரம், திருவாசகம், திருப்புகழ் பாடல்கள் எழுதப் பெற்றுள்ளன. உட்புற கூரைகள், தூண்கள் அனைத்தும் அழகிய சித்திர வேலைப்பாடுகளுடன் திகழ்கின்றன. மாணிக்க வாசகர் சன்னதியின் இடதுபுறம் கருங்கல் சுவரில் சிவபுராணம் பொறிக்கப்பட்டுள்ளது.


Home | History | Services | Contact us

Poojas | Festivals | Annadhanam | Administration | Gallery

Arulmigu Viswanatha Swamy Temple - Sivakasi | Maintained by Maharaj Computers