அருள்மிகு விஸ்வநாத சுவாமி திருக்கோவில், சிவகாசி - 626 123.


life general mutual share

சிவகாசி சிவன் கோவிலின் வரலாறு

ஆன்மிக உணர்வை அவனி எங்கும் பரப்பிய பாரத நாட்டின் தென்பகுதியில் பொதிகை மலையில் அமைத்துள்ள திருக்குற்றாலத்திற்கு அருகில் உள்ள திருத்தலம் தென்காசி. அது பாண்டிய மன்னன் அரிகேசரி பராங்குச மன்னரின் தலைநகரம். அவன் சிவபெருமான் மீது சீரிய அன்பு செலுத்தி வந்தான். தென்காசில் ஒரு சிவா ஆலயத்தை அமைத்து அதில் காசியில் இருந்து சிவலிங்கத்தைக் கொண்டு வந்து எழுந்தருளச் செய்வதற்கு ஏற்பாடு செய்தான்.

காசியில் உருவாக்கப்பட்ட சிவலிங்கத்தைக் கங்கையில் நன்னீராட்டி படைகள் புடைசூழ கொண்டு வந்து கொண்டிருந்தான். பல நாள் பயணம், வரும் வழியில் தற்போது சிவகாசி நகரமும், அருள்மிகு விஸ்வநாத சுவாமி திருக்கோவிலும் அமைந்துள்ள இடம் அப்போது வில்வ வனமாக இருந்தது. அங்கே ஒரு நாள் தங்கிச் செல்ல ஏற்பாடுகள் செய்தான். அதனுடன் வந்த அரசி பயணம் செய்ய முடியாதபடி பூப்பெய்திய காரணத்தாலும், சிவலிங்கத்தை சுமந்து வந்த காராம் பசு அவ்விடத்தை விட்டு நகர மறுத்தாலும் பயணம் தடைப்பட்டது.

தென்காசி ஆலயத்தில் சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து குடமுழுக்குச் செய்ய வேண்டிய உரோகிணி நன்னாள் வந்துவிடவே காடுகளை களைந்து சிறு ஆலயம் ஒன்றைக் கட்டி குறிப்பிட்ட சுப வேளையில் அங்கேயே (சிவகாசியில்) குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) செய்து வைத்தான். அதுவே தற்போது அருள்மிகு விஸ்வநாத சுவாமி ஆலயத்தின் நடுநாயகமாக விளங்கும் காசிலிங்கம் ஆகும்.

நாளடைவில் வழிபட வந்த மக்களும், வணிகர்களும் அங்கு தங்கி குடியிருப்புகளை அமைத்து வழ தொடங்கினர். சிவன் காசியில் இருந்து வந்து தங்கிய இடம் ஆதலால் சிவன்காசி என்றும், பின்பு சிவகாசி என்றும் அழைக்கப்படுகிறது.

வடக்கே வடகாசி, தெற்கே தென்காசி, நடுவே சிவகாசி என்ற பெருமை சிவகாசிக்கு உண்டு. திருப்பதி மற்றும் சிவகாசி ஆகிய இரண்டு தெய்வீக தலங்களின் பெயர்கள் மட்டுமே முதல் எழுத்தையும், இறுதி எழுத்தையும் ஒரே எழுத்தாகக் கொண்டுள்ளது என்பது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.

சிவகாசி கோயிலைக் கட்டிய பராங்குச மன்னன் தன் தவவலிமையால் ஆகாய மார்க்கமாகச் செல்லும் ஆற்றலைப் பெற்றிருந்தான். எனவே "அரிகேசரி" என்று அழைக்கப்பட்டான். துறவுநிலை மேற்கொண்ட பின் "பராசர முனிவர்" என்று அழைக்கப்பட்டான். அவன் தினமும் ஆகாய மார்க்கமாக கங்கை சென்று நீராடி சிவகாசி காசி விஸ்வநாதரைத் தரிசித்து விட்டு காசியிலும் இறங்கி காசிலிங்கத்தை வழிப்பட்டு பின்பு தென்காசி செல்வது வழக்கம் என்று கூறப்படுகிறது.

பராசர முனிவர் என்ற பெயரில் பராங்குச மன்னனோ அல்லது வேறு ஒரு முனிவரோ சிவகாசியில் தங்கி வழிபாடுகளை ஆகம விதிப்படி அமைத்து படிப்படியாக அருள்மிகு சிவகாசி காசி விஸ்வநாத சுவாமி சந்நிதியையும் அருள்மிகு விசாலாட்சி அம்மன் சந்நிதியையும் கட்டி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

அரிகேசரி பராங்குச மன்னனுக்குப் பின் ஆட்சிக்கு வந்த பாண்டிய மன்னர்கள் படிப்படியாக முன் மண்டபங்கள், பிரகாரம், திர்த்தம், சுற்றுமதில், ரதவீதி முதலியவைகளை அமைத்திருக்க வேண்டும். அருள்மிகு சிவகாசி காசி விஸ்வநாத சுவாமி ஆலயம் பதினைந்தாம் நுற்றாண்டில் (கி.பி.1445) தொடங்கப் பெற்று பதினாறாம் நுற்றாண்டின் இறுதியில் நிறைவு பெற்றிருக்க வேண்டும். பாண்டிய மன்னர்களின் மீன் சின்னம் மற்றும் கல்வெட்டுகளும் ஆங்காங்கே காணப்படுகிறது. மன்னர் திருமலை நாயக்காராலும் பல திருப்பணிகள் இக்கோவிலிக்கு செய்யப்பட்டன.

காசிலிங்கம் எழுந்தருளியுள்ள கிளை சிறிய உருவில் முதன் முதலாக சீரமைத்தவர் ஆனையப்ப ஞானி என்ற பெரியார் ஆவார். பின்னர் நாயக்க மன்னர் காலத்தில் இக்கோயில் பெரிதாக வளர்ந்தது. கி.பி.1659-ல் முத்து அலிகாத்திரி என்ற முத்து வீரப்ப நாயக்கரால் கோவிலிக்கு தேர் அமைக்கப்பட்டது. தேராடும் வீதிகளும் ஒழுங்குப்படுத்தப்பட்டது என்பது வரலாற்றுச் செய்தி.

வணிகர்கள் தங்கிச் சென்று, வழிபாடு நடத்த, பலர் குடியிருப்புகளை அமைத்து வழ தொடங்கினர். சிவகாசி கிராமமாகி, ஊராகி, நகரமாகி, தாலுகாவின் தலைநகரமாகவும் மாறியுள்ளது. மக்களின் சுறுசுறுப்பு மற்றும் அயராத உழைப்பினால் அச்சுத் தொழில், நாள் காட்டி படங்கள், தீப்பெட்டிகள், வான வேடிக்கைப் பொருட்கள் போன்ற உற்பத்தியில் முதன்மை பெற்றதால் சிவகாசி "குட்டி ஜப்பான்" என்றும் புகழ்படுகிறது.

தற்போது சிவகாசி நகர மக்கள் ஆன்மிகப் பணியில் முன்னோடியாகத் திகழ்கின்றனர். வார வழிப்பாட்டுச் சங்கங்கள் பல ஆன்மிக வளர்ச்சிக்குப் பெருந்துணை புரிந்து வருகின்றன. அருள்மிகு சிவகாசி காசி விஸ்வநாத சுவாமி அருள்மிகு விசாலாட்சி அம்மன் திருக்கோவிலின் குடமுழுக்கு விழா 04-09-1966 ல் நடைப்பெற்றது. இறை அருளாலும், தெய்வீக பேரவை என்ற அமைப்பின் அயராத உழைப்பாலும், தனி அன்பர்களின் தனிப்பட்ட உபயங்களாலும், தமிழக அரசின் ஆதரவாலும், எல்லா சமூக மக்களின் பொருள் உதவியாலும், சீரிய முறையில் திருப்பணி 03-06-1996 ல் நடைப்பெற்றது. தற்போது மீண்டும் சிவகாசி தெய்வீகப் பேரவை என்ற அமைப்பின் அயராத உழைப்பாலும், எல்லா சமூக மக்களின் பேருதவியாலும், திருப்பணி வேலைகள் செய்து முடிக்கப்பட்டு 06-06-2011 அன்று மகாகும்பாபிசேகம் நடைப்பெற்றது.


Home | History | Services | Contact us

Poojas | Festivals | Annadhanam | Administration | Gallery

Arulmigu Viswanatha Swamy Temple - Sivakasi | Maintained by Maharaj Computers